» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

70 ஆண்டுகளில் காங். செய்ய முடியாததை 5 ஆண்டு பாஜக ஆட்சியில் சாதித்துவிட்டோம்: பிரதமர் மோடி

திங்கள் 11, மார்ச் 2019 11:48:28 AM (IST)

70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசால் செய்ய முடியாததை, 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு நிறைவேற்றி சாதித்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். 

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. அந்த அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா வெளியிட்ட சிறிது நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக டுவிட்டர் பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது: எல்லோருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற அடிப்படையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உங்கள் ஆசியை நாடுகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக (காங்கிரஸ் ஆட்சியால்) செய்ய முடியாததை, நாங்கள் 5 ஆண்டுகளில் நிறைவேற்றி சாதித்து இருக்கிறோம். தற்போது ஒரு பலம் வாய்ந்த, வளமான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதற்கான தருணம் வந்திருக்கிறது. இன்றைக்கு நாடு அதிவிரைவில் மிக வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடாக முடியும்; பயங்கரவாதத்துக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும். சாதனை வேகத்தில் வறுமையை ஒழிக்க முடியும். இந்தியாவை தூய்மை ஆக்க முடியும். ஊழலை ஒழித்துக்கட்ட முடியும். ஊழல்வாதிகளை தண்டிக்க முடியும். பரந்த வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதை இந்திய மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு, 50 கோடி இந்தியர்களுக்கு தரமான, இலவச சிகிச்சை வசதியைப் பெற முடிந்திருக்கிறது. 42 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் முதியோர் ஓய்வூதியம் பெற வழி பிறந்திருக்கிறது. 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி கிடைக்கிறது. கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க மக்களுக்கு வருமான வரி விலக்கு கிடைத்திருக்கிறது. 7 கோடி பெண்களுக்கு புகையில்லா சமையலறை வசதி (இலவச கியாஸ் திட்டம் மூலம்) வாய்த்திருக்கிறது. 1½ கோடி இந்தியர்களுக்கு சொந்த வீடு கிடைத்திருக்கிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில், 130 கோடி இந்திய மக்களின் ஆசிகளோடு, இதற்கு முன்பு முடியாது என கருதப்பட்டதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது.

2019 தேர்தல் இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கை பற்றியது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக திருவிழாவாக தேர்தல் நடக்க உள்ளது. 2019 தேர்தலை தங்கள் பங்களிப்பு மூலம் மக்கள் நிறைவானதாக ஆக்க வேண்டும். இந்த தேர்தலில் வரலாற்று சாதனை அளவாக நிறைய பேர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் தடவையாக வாக்களிக்க உள்ளவர்கள், சாதனை படைக்கிற வகையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு வாழ்த்துக்கள். பல்லாண்டு காலமாக தேர்தல்களுக்கு ஒழுங்கான ஏற்பாடுகளை செய்த தேர்தல் கமிஷனை எண்ணி இந்தியா பெருமைகொள்கிறது. இவ்வாறு அந்தப் பதிவுகளில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

ஆசீர். விMar 12, 2019 - 12:52:21 PM | Posted IP 162.1*****

உண்மையான கருத்து நான் அதை ஆமோதிக்கிறேன் . காங்கிரஸ் கட்சி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வதைத்தது. ஆனால் உங்கள் அரசு ஐந்தே ஆண்டுகளில் மக்களை வெட்டி கொன்றே விட்டது

நிஹாMar 12, 2019 - 11:48:28 AM | Posted IP 162.1*****

சபாஷ்...இதற்கு மேலும் எதையும் சாதித்துவிடாதீர்கள். எங்களுக்கு கிலியாக உள்ளது.

தமிழன்-Mar 11, 2019 - 05:10:28 PM | Posted IP 162.1*****

70 வருடங்களில் இல்லாத, வேலையின்மை, பாதுகாப்பு இன்மை ஜனநாயக படுகொலை பணமதிப்பிழப்பு வரி தொழில் இன்மை ஒத்துழைப்பு இன்மை கவர்னர் வைத்து ஆட்சி கார்பொரேட் வளர்ச்சி கடன்காரனை பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு அனுப்புதல் - இப்படிதான் உங்க சாதனைகள் நீளுது மோடி சார்வாள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory