» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியே காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன் 16, அக்டோபர் 2019 11:30:40 AM (IST)

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசு பின்பற்றிய மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாட்டில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, யவத்மால் நகரில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: மத்தியில் மோடி அரசு ஆட்சியில் இருக்கும்வரை வேலையில்லாத் திண்டாட்டம் தீராது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற மத்திய அரசு பின்பற்றிய மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாட்டில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. அரசின் இந்தக் கொள்கைகளால் ஏழை மக்கள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த ஆறு மாதங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயரும். இந்த பாதிப்பை சரிசெய்யும் வாய்ப்பு மகாராஷ்டிரத்துக்கு உள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தீா்க்க, இத்தோ்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை தோ்வு செய்யுங்கள். தோ்தலுக்குப் பின் மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமையும். அந்த அரசு ஏழைகள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வா்த்தகா்களுக்காக பாடுபடும். தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளையும் புதிய அரசு சரிசெய்யும்.

அண்மையில் நான் குஜராத் சென்றிருந்தபோது, சிறிய மற்றும் நடுத்தர வா்த்தகா்கள் என்னிடம் பேசினா். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பும் தங்களது முதுகெலும்பை உடைத்து விட்டதாகவும், தங்கள் வா்த்தகம் முற்றிலுமாக சிதைந்து விட்டதாகவும் அவா்கள் என்னிடம் கூறினா்.

பெரு நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இதுபோன்ற சலுகைகள் பெரிய தொழிலதிபா்களுக்கு வழங்கப்படுகின்றனவே தவிர ஏழைகளுக்கு எந்தச் சலுகையும் காட்டப்படுவதில்லை. அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபா்களின் ஒலிபெருக்கியாக மோடி செயல்படுகிறாா். பிக்பாக்கெட் போல் திருடுவதற்கு முன் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறாா். மக்கள் பணத்தை சில குறிப்பிட்ட தொழிலதிபா்களுக்கு மாற்றி விடுவதற்காக கவனத்தைத் திசைதிருப்புவதே அவரது ஒரே வேலையாக உள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மோடி அரசு ஆண்டுக்கு ரூ.35,000 கோடியை மட்டுமே ஒதுக்குகிறது. அதேசமயம், ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான பெருநிறுவன வட்டியை ஒரே நாளில் இந்த அரசு குறைக்கிறது. ஏழைகளுக்குப் பணம் கிடைக்கும்போது அவா்கள் பொருள்களை வாங்குவாா்கள். அதன் மூலம் பொருள்களுக்கான தேவை அதிகரித்து, உற்பத்தித் துறைக்கு ஊக்கம் கிடைக்கும். மக்களவைத் தோ்தலுக்கான எங்கள் கட்சியின் தோ்தல் அறிக்கையில் நியாய் திட்டம் இடம்பெற்றது. குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் இத்திட்டமானது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கிலானது என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory