» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மத்திய அரசை எதிர்க்கும் மலிவான அரசியல் ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல: தமிழக பாஜக

வியாழன் 27, பிப்ரவரி 2020 5:49:19 PM (IST)

மற்றவர்களைப் பார்த்து மத்திய அரசை எதிர்க்கும் மலிவான அரசியல் ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த காலத்திலேயே அவர் தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று தெரிவித்தார். அது ஆன்மிக அரசியல் அல்ல பாஜக ஆதரவு அரசியல் என அவரை எதிர்ப்போர் விமர்சித்தனர். ரஜினியின் கருத்துகளும் பாஜகவினரால் வரவேற்கப்பட்டது. பாஜகவை, மத்திய அரசை ரஜினியும் பல நேரம் ஆதரித்தார். ராமரும், அனுமரும் போல மோடியும் அமித் ஷாவும் எனப் புகழ்ந்து பேசினார். துக்ளக் விழாவில் அவர் பெரியார் குறித்தும், முரசொலி, துக்ளக்கை ஒப்பிட்டுப் பேசியதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

சிஏஏ குறித்து ரஜினியின் கருத்தும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவரது இல்லம் அருகே ரஜினி அளித்த பேட்டியில் டில்லி கலவரத்தை அடக்காதது மத்திய உளவுத்துறையின் வீழ்ச்சி. அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. வன்மையாகக் கண்டிக்கிறேன். இரும்புக்கரம் கொண்டு கலவரத்தை அடக்குங்கள் என ரஜினி பேசினார். இதனை பாஜகவினர் ரசிக்கவில்லை. இந்நிலையில் ரஜினியின் பேட்டிக்கு தமிழக பாஜக பொருளாளர் எதிர்வினையாற்றியுள்ளார். ரஜினி பேட்டி அளித்த சில மணி நேரத்தில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக பொருளாளர், செய்தித்தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் அளித்த பேட்டி:

ரஜினியின் பேட்டியில் சிஏஏ விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள வன்முறை குறித்த கவலையை உணர முடிகின்றது. ரஜினிகாந்த் உளவுத்துறை செயல்படவில்லை எனச் சொல்வதும், மத்திய அரசைக் கண்டிப்பதும் சரியான விமர்சனங்கள் அல்ல. டில்லி வன்முறை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சதிச்செயல். இதை மத்திய அரசு கவனமாக, நேர்த்தியாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு குறித்த ரஜினியின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. யாரையோ திருப்திப்படுத்த ரஜினி இப்படிப் பேசி இருக்கின்றார். நடுநிலைமை என காட்டுவதற்காக ரஜினி இப்படிச் சொல்லி இருக்கலாம். ஆனால், இது நடுநிலைமை அல்ல. ஒரு சார்பு நிலைமை.

வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என ரஜினி பேசியிருப்பது மலிவான அரசியல். மிகவும் மோசமான, ஜனநாயகத்தை மதிக்காத , போலித்தனமான அரசியல். பாஜக 130 கோடி மக்களுக்கான கட்சி. பாஜக மத அரசியல் செய்யவில்லை. மற்ற அரசியல் கட்சியினர்தான் மதவாத அரசியல் செய்கின்றனர். ரஜினிகாந்த் குறிப்பிட்டுச் சொல்லும் மதவாத அரசியலைச் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். அதுசார்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுகவினர்தான்.

ரஜினிகாந்த் பேட்டியில் வன்முறையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். உளவுத்துறை தோற்றுவிட்டது என்று ரஜினி சொல்வது அவரது அறியாமை. மத்திய அரசைக் கண்டிப்பதும் அவருடைய அறியாமை. ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரஜினி பேசுவது, எல்லா கட்சிகளைப் போல மலிவான அரசியல் செய்வதற்கான வாசகம். ரஜினி தெரிவித்த 90 சதவீதக் கருத்துகள் வன்முறைக்கு எதிரானவை. அவர் அறியாமையால் சொல்லி இருக்கின்ற ஒன்றிரண்டு கருத்துகளுக்கு சரியான பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். ரஜினிகாந்த் மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலைச் செய்வது, சொல்லாமல் இருப்பது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. 

உண்மை, சத்தியத்தைச் சொல்வது பாஜக. அதை மற்றவர்கள் திருப்பிச் சொன்னால் ஊதுகுழல் என்று சொல்வது ஊடகங்களின் விமர்சனம். பாஜகவின் கருத்தைத் திருப்பிப் பேசுவதில் ரஜினிகாந்த் பெருமைப்பட வேண்டும். வெட்கப்பட, வருத்தப்பட, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சிஏஏவைத் திரும்பப் பெற வேண்டிய தேவையில்லை. மற்ற கட்சிகள் இதைப் பேசுகின்றன. திரும்பப் பெற வாய்ப்பில்லை என ரஜினி ஏன் பேசுகின்றார் என்றுதான் புரியவில்லை. ரஜினி பேசியதில் பாஜகவிற்கு எதிரான கருத்துகள் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவர் தெரிவித்த கண்டனங்கள் அறியாமையால், மற்றவர்களோடு தானும் முன் நிற்க வேண்டும் என்ற கட்டாயத்தால் சொல்லி இருக்கலாம். இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் பேட்டி அளித்துள்ளார்.


மக்கள் கருத்து

சொல்வதெல்லாம் உண்மைFeb 29, 2020 - 10:22:46 AM | Posted IP 162.1*****

நடிகர்களுக்கு வாய் மட்டும் தீயா வேலை செய்யும் , மற்றபடி ஒண்ணுமில்லை ...

உண்மைFeb 28, 2020 - 12:12:33 PM | Posted IP 162.1*****

வயது 70! இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை! எந்த கட்சியிலும் இணையவில்லை! கட்சி ஆரம்பித்து பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து முடிக்க குறைந்தது 10 வருடங்கள் தேவை! அப்படியென்றால் 70 + 10 = 80 இதெல்லாம் புரியுமா?

மெய்யன்Feb 27, 2020 - 10:07:48 PM | Posted IP 108.1*****

Dai BJP innum nalla Rajini a oppose pannunga.

மெய்யன்Feb 27, 2020 - 10:06:54 PM | Posted IP 162.1*****

avar sonadhu Krishnar and Arjunar.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory