» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம்: தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 12 கட்சிகள் ஆதரவு

சனி 8, ஜனவரி 2022 5:41:31 PM (IST)



சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப் போாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு நீட் தேர்வுக்கான திருத்த சட்டம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவற்றின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன் நிறுத்தி உள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். 

குறிப்பாக கிராமப்புற விளிம்பு நிலை மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வுகளை சந்திக்கும் கல்வித்திறனை பெற முடியாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மருத்துவ சேர்க்கைகளில் மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இந்த நோக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி நுழைவுத் தேர்வுகளை அகற்றி தமிழக மாணவர்களுக்காக தனிச் சட்டம் கொண்டு வந்தார்.

அந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவது உறுதியானது. ஆனால் நீட் தேர்வு அமலான பிறகு அது பறிபோய்விட்டது. தமிழக மாணவர்களின் எதிர்காலம் வீணாவதால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த தீர்மானம் இதுவரை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமலேயே இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து இது தொடர்பாக பேசினார். அதன் பிறகும் கவர்னர் அந்த சட்ட முன் வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதன்பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மனு கொடுக்க அனுமதி கேட்டனர். ஆனால் தமிழக எம்.பி.க்களை அமித்ஷா சந்திக்க மறுத்து விட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதுபற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் தொடரும். அதை தொடர்ந்து முன் எடுத்து செல்வோம்” என்று அறிவித்தார். மேலும் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த நிலைப்பாட்டை இயற்றுவதற்கு 8-ந்தேதி (இன்று) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு நேற்று முறைப்படி கடிதங்கள் அனுப்பப்பட்டன. 13 கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு அனுப்பப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி (தி.மு.க.), விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ், சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜி.கே.மணி (பாட்டாளி மக்கள் கட்சி), வானதி சீனிவாசன் (பா.ஜனதா), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகிய 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்தன. அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் 13 கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தன. பா.ஜக. மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. கூட்டத்தில் அடுத்தகட்டமாக நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

உண்மJan 10, 2022 - 11:07:56 PM | Posted IP 173.2*****

திமுக ஒரு நாடக கம்பெனி மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது

sankarJan 8, 2022 - 09:18:33 PM | Posted IP 162.1*****

then why this all party meeting sir- bull shitting everybody?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory