» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்? திருச்சி சிவா கேள்வி
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:40:32 PM (IST)
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்கப்பட்டிருக்கிறதா என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் இன்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். தொடர்ந்து, திமுகவின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதாவது: வந்தே மாதரம் பாடலில் உள்ள சிறப்பை பற்றி அனைவரும் பேசினார்கள். மக்கள் பிரச்னைகளை பேச கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வந்தே மாதர விவாதம் மிக முக்கியமென இரு அவைகளிலும் மத்திய அரசு நடத்துகிறது.
ஆனால், தற்போது மாநிலங்களவையில் அவை முன்னவர் இல்லை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இல்லை. மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மட்டுமே உள்ளார். பொறுப்புணர்ச்சி என்பது விவாதத்தை கொண்டு வருவதில் மட்டுமல்ல, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலும் உள்ளது. வந்தே மாதரத்தை பற்றி விவாதிக்க சொன்னால் அவர்கள் நேரு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
வந்தே மாதரமும், ஜன கன மன தேசிய கீதமும் வங்காள மொழியில் இருந்தாலும் காஷ்மீர் முதல் குமரி வரை பரவியது. யாரும் எந்த மொழி எனப் பார்க்கவில்லை. எல்லோருக்கும் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது.
தமிழகத்தில் நேதாஜி பெயரில் சாலை வைத்துள்ளோம். கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனை என்று காந்தியின் மனைவி பெயரில் மருத்துவமனை வைத்துள்ளோம். கமலா நேரு பூங்கா என்று நேருவின் மனைவியின் பெயரில் பூங்கா வைத்துள்ளோம். வட இந்தியாவில் வ.உ.சிதம்பரனார் சாலை உண்டா?, பாரதியார் தெரு உண்டா?, யாருக்காவது வீரபாண்டிய கட்டபொம்மன்னை பற்றி தெரியுமா? ஏன் புறக்கணிக்கப்பட்டோம்?
வெள்ளையனே வெளியேறு என்று முதன்முதலில் எதிர்த்துப் போராடியவர் பூலித்தேவன். பின்னர், கட்டபொம்மன். இவர்களை வட இந்தியர்கள் அறிவார்களா? இலங்கை பகுதியை மீட்டெடுத்த வேலுநாச்சியாரை தெரியுமா? பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது.
வ.உ.சி. பற்றி பிரதமர் பேசும்போது கூறுகிறார். ஆனால் அவருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? ரஷிய அதிபருக்கு குடியரசுத் தலைவர் விருந்தளிக்கும் போது, இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் அழைக்கப்படவில்லை.வெள்ளையர்களை வணிகத்தில் தோற்கடிக்க வ.உ.சி. சுதேசி கப்பலை வாங்கினார். அதனை வந்தே பாரதம் என்றழைத்தார். அவருக்கு இரு ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் செக்கு இழுக்க வைத்தனர்.
வட இந்தியாவில் இவர்களைப் பற்றி யாருக்கு தெரியும்? குறைந்தபட்சம் இப்படியெல்லாம் தலைவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று உங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆவது கொண்டு வாருங்கள்.
ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை உருவாக்கியவரே செண்பகராமன் என்பவர்தான். இந்தியாவை தவறாக பேசிய ஹிட்லரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் பெற்றவர். முதன்முதலாக ஹிட்லர் மன்னிப்பு கடிதம் எழுதியது தமிழனுக்கு தான். நேதாஜிக்கும் முன்னோடியான இவரின் பெயர் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் இல்லை.
நீங்கள் பேசும் தேசியம் உண்மை என்றால் காஷ்மீர் முதல் குமரியை ஒன்றாக நடத்துங்கள். எல்லா மொழியையும் ஒன்றாக நடத்துங்கள். தீரன் சின்னமலையை தமிழ்நாடு மட்டுமே அறியும் தில்லியும், அலகாபாத்தும், பாட்னாவும் அறிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட மத்திய இணையமைச்சர் எல். முருகன், ”தொடக்கம் முதலே வரலாற்றை தவறாகப் பேசி வருகிறார், 20 ஆண்டுகள் திமுக கூட்டணிதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. நீங்கள் அப்போது நாடு முழுவதும் கொண்டு வராதது ஏன்?. உங்கள் பொறுப்பை தட்டிக் கழித்தார்கள். நாங்கள் காசி தமிழ் சங்கமம் நடத்துகிறோம். நமது பிரதமர் பாரதியார், பூலித்தேவர், வேலுநாச்சியார் என அனைவரையும் கொண்டாடுகிறார்” எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மான கடிதம் வழங்கிய இண்டியா கூட்டணி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:11:33 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் அளித்த குடும்பத்தினர் மீது வழக்கு: நாட்டிலேயே முதல்முறை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:34:56 AM (IST)

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:44:00 AM (IST)


