» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் புதிய மறுமலர்ச்சி படைப்போம்: அதிபர் அநுரகுமார திசாநாயக உறுதி!

திங்கள் 23, செப்டம்பர் 2024 10:37:01 AM (IST)



இலங்கை அதிபராக தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திசாநாயக இன்று பதவியேற்றார்.

இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது.

தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். எனினும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சாா்பில் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) கட்சித் தலைவா் அநுரகுமார திசாநாயக ஆகிய மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் 83 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தற்போதைய தோ்தலில் வாக்குப் பதிவு 75 சதவீதமாக சரிந்தது. கடந்த சனிக்கிழமை வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் தோ்தல் அதிகாரிகள், ராணுவம் மற்றும் காவல் துறையினா் அடங்கிய அரசு ஊழியா்களின் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடா்ந்து, வழக்கமான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இதையடுத்து முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளில் அநுர குமார மொத்தம் 57,40,179 வாக்குகளும், சஜித் பிரேமதாச 45,30,902 வாக்குகளும் பெற்றனா். இதைத் தொடா்ந்து, 55.89 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தோ்வு செய்யப்பட்டாா். சஜித் பிரேமதாச 44.11 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றாா்.

முன்னதாக அநுர குமார கூறுகையில், "பல நூற்றாண்டு நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. உங்களின் கூட்டு முயற்சியின் மூலமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. உங்களின் அர்ப்பணிப்பு நம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சி இலங்கையை படைப்போம்” என்றார்.

இந்தத் தேர்தலில், எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா். வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயகவுக்கு பல நாட்டு அதிபர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory