» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசினால் 6 மாதம் சிறை!
ஞாயிறு 3, நவம்பர் 2024 10:29:21 AM (IST)
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து அங்கு சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. அதேசமயம் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.
அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் பதிவாகி உள்ளன. இது நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும். இதனால் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. அப்போது சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதே விபத்துக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.
எனவே போக்குவரத்து விதிகளில் அங்கு புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.