» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப் வெற்றி எதிரொலி: பேச்சுவார்த்தைக்கு கதவுகள் திறந்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!
வியாழன் 7, நவம்பர் 2024 11:48:32 AM (IST)
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்தையை நடத்த தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
தற்போது வரை அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு வரலாறு காணாத அளவுக்கு மோசமானதாகவே உள்ளது. இருப்பினும், டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளதாக ரஷ்யா அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவுடனான உறவு மிகுந்த தொய்வு நிலையில் இருந்தாலும் அதனுடன் சுமுக உறவை மேற்கொள்வதற்கான பேச்சுவார்தையை நடத்த ரஷ்யா தயாராகவே உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக அனைத்தையும் கவனமாக கண்காணித்து ஆராய்வோம்.
ஜனவரியில் ட்ரம்ப் அதிபராக வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.