» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மனைவி-மகனை அறையில் பூட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை: கணவரும் தற்கொலை முயற்சி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:27:58 AM (IST)
நெல்லை அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி, மகனை அறையில் பூட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக்கொன்று கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள காரைக்குளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சகாரியா (66). இவரது மனைவி மெர்சி. இந்த தம்பதிக்கு ஹென்றி, ஹார்லி பினோ (27) ஆகிய 2 மகன்களும், ஹெலன் என்ற ஒரு மகளும் உள்ளனர். ஹார்லி பினோ அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். சகாரியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த மெர்சி தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் அதே தெருவில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் சகாரியா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 21-ந் தேதி மூத்த மகன் ஹென்றிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சகாரியாவிற்கு உடன்பாடு இல்லையாம். இதனால் மெர்சியும் தனது மகனின் திருமணத்திற்கு சகாரியாவை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில் ஹார்லி பினோ தனது தந்தை சகாரியா வசித்து வரும் வீட்டில் மீதமிருக்கும் தனது துணி உள்ளிட்ட உடைமைகளை எடுத்து வருவதற்காக நேற்று மதியம் புறப்பட்டார். ஆனால் ஏற்கனவே பிரச்சினை இருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என பயந்துபோன மெர்சியும் தனது மகனுக்கு பாதுகாப்பிற்காக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
தாய்-மகன் இருவரும் சகாரியாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த சகாரியா, தனது மனைவி, மகனை நேரில் பார்த்த உடனே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அதையும் மீறி 2 பேரும் தங்களின் உடைமைகளை எடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சகாரியா, தனது மனைவி, மகனை பிடித்து இழுத்து ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு கதவை பூட்டிவிட்டார்.
இதையடுத்துதான் சகாரியா கொடூர செயல் வெளிவந்தது. வீட்டில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜன்னல் வழியாக ஹார்லி பினோ, மெர்சியை அடைத்து வைத்துள்ள அறைக்குள் ஊற்றினார். மரண பயத்தில் இருந்த இருவரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். ஆனாலும் கண்டுகொள்ளாத சகாரியா, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அறை முழுவதும் தீப்பிடித்து, ஹார்லி பினோ, மெர்சியின் உடலிலும் தீ பரவியது. இதில் அவர்கள் இருவரும் அலறிக்கொண்டிருந்த நேரத்தில், சகாரியாவும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்துவிட்டு உள்ளே நுழைந்தனர். அங்கு அறையின் உள்ளே படுகாயங்களுடன் கிடந்த ஹார்லி பினோ, மெர்சி மற்றும் அறைக்கு வெளியே துடித்துக்கொண்டிருந்த சகாரியா என 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மெர்சி, ஹார்லி பினோ ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சகாரியாவுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி, மகனை தீவைத்து கொன்று தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
