» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
சனி 16, நவம்பர் 2024 12:35:07 PM (IST)
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடக்கிறது. இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் கடலில் புனித நீராடி புத்தாடை அணிந்து கோவில் வளாகம், தூண்டுகை விநாயகர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் குருசாமி தலைமையில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் சரண கோஷம் முழங்கியது.