» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.
இந்திய அணியில் ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக திலக் வர்மா சேர்க்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணியில் காயத்தால் அவதிப்படும் நன்ரே பர்கர், டோனிடி ஜோர்ஜிக்கு பதிலாக ரையான் ரிக்கெல்டன், ஓட்னில் பார்த்மேன் இடம் பெற்றனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார். கடந்த 20 ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்தியா முதல்முறையாக டாஸ்சில் ஜெயித்தது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரையான் ரிக்கெல்டன் (0) முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் சிக்கினார். இதைத்தொடர்ந்து கேப்டன் பவுமா, தொடக்க ஆட்டக்காரருமான குயின்டான் டி காக்குடன் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். ஸ்கோர் 114 ரன்னை எட்டிய போது பவுமா 48 ரன்னில் (67 பந்து, 5 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த மேத்யூ பிரிட்ஸ்கே (24 ரன்), மார்க்ரம் (1 ரன்) ஆகியோர் பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரு ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வேகமாக மட்டையை சுழற்றி அசத்திய குயின்டான் டி காக், ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் சிக்சர் விளாசி சதத்தை (80 பந்தில்) கடந்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 23-வது சதம் இதுவாகும். சற்று நேரத்தில் குயின்டான் டி காக் 106 ரன்னில் (89 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அதிரடி ஆட்டக்காரர் டிவால்ட் பிரேவிஸ் (29 ரன்), மார்கோ யான்சென் (17 ரன்) ஆகியோருக்கு ஒரு ஓவரில் குல்தீப் யாதவ் செக் வைத்தார். அடுத்து வந்த கார்பின் பாஷ் (9 ரன்), லுங்கி இங்கிடி (1 ரன்), ஓட்னில் பார்த்மேன் (3 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 47.5 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 270 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட் கபளீகரம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து 271 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா நல்ல அடித்தளம் அமைத்தனர். 61-வது அரைசதம் அடித்த ரோகித் சர்மா 75 ரன்னில் (73 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) கேஷவ் மகராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் புகுந்த விராட் கோலி நாலாபுறமும் பந்தை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார். 39.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும் (121 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), 76-வது அரைசதம் அடித்த விராட் கோலி 65 ரன்களுடனும் (45 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதும், விராட் கோலி (302 ரன்) தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரில் (0-2) கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வென்று இருந்தன. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் கட்டாக்கில் நாளை மறுநாள் நடக்கிறது.
20 ஆயிரம் ரன்னை கடந்த ரோகித் சர்மா
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 75 ரன்கள் எடுத்தார். முன்னதாக அவர் 27 ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டியை சேர்த்து) 20 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்திய வீரர் ஒட்டுமொத்தத்தில் 14-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 38 வயதான ரோகித் சர்மா 505 சர்வதேச போட்டிகளில் ஆடி மொத்தம் 20,048 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 34,357 ரன்களுடன் (664 போட்டிகள்) முதலிடத்தில் இருக்கிறார்.
தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான குயின்டான் டி காக் (106 ரன்) 23-வது சதம் அடித்தார். ஒருநாள் போட்டியில் அவர் இந்தியாவுக்கு எதிராக அடித்த 7-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான இலங்கை முன்னள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவின் (7 சதம், 85 இன்னிங்சில்) சாதனையை சமன் செய்தார். ஆனால் குயின்டான் 23 இன்னின்சில் இந்த சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சதம் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இலங்கையின் குமார் சங்கக்கராவுடன் (இவரும் 23 சதம்) பகிர்ந்து கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)

விஜய் ஹசாரே தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பின் விராட் கோலி.!
புதன் 3, டிசம்பர் 2025 12:46:19 PM (IST)

ஐ.பி.எல். போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
புதன் 3, டிசம்பர் 2025 8:28:27 AM (IST)

சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடி சதம் : வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:11:10 PM (IST)

கோலி அபார சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:38:55 AM (IST)

மகளிர் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்!
சனி 29, நவம்பர் 2025 5:20:14 PM (IST)


