» சினிமா » செய்திகள்
கொட்டுக்காளியை ஓடிடியில் விற்றிருக்கலாம் : இயக்குநர் அமீர் கருத்து!
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 12:55:53 PM (IST)
கொட்டுக்காளி திரைப்படத்தை ஓடிடியில் நல்ல விலைக்கு விற்றிருக்கலாம் என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை மற்றும் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளியும் ஆக.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின. இதில், வாழை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கொட்டுக்காளி விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றாலும், பொது ரசிகர்களைக் கவரவில்லை. பலருக்கும் கிளைமேக்ஸ் முடிவில் விருப்பமில்லாதது தெரிகிறது. இதுவரை, இப்படம் இந்தியளவில் ரூ. 1.30 கோடி வசூலித்துள்ளது.
இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் பேசிய இயக்குநர் அமீர், "சுயாதீனமாக திரைப்படங்களை எடுப்பவர்களைப் பார்க்கும்போதும், அவர்கள் கஷ்டப்பட்டு மேலேறியதைக் கேட்கும்போதும் நன்றாக இருக்கின்றன. ஆனால், நாம் எதை திரைப்படமாக்கியிருக்கிறோமோ அதுவே நம்மிடம் பேச வேண்டும். வாழை, கொட்டுக்காளியை உதாரணமாகக் கூறுகின்றனர். வாழை திரைப்படம் கமர்ஷியல் சினிமாவுக்கு அருகில் இருக்கக் கூடியது. அதனால், அதன் வெற்றி சாத்தியமாகியுள்ளது.
ஆனால், கொட்டுக்காளி முழுக்க முழுக்க சர்வதேச திரைவிழாவுகளுக்காக உருவாக்கப்பட்டது. வணிக சினிமாக்களுடன் போட்டிபோட அதை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது. நான் கொட்டுக்காளியைத் தயாரித்திருந்தால் திரையரங்கத்திற்குக் கொண்டு வந்திருக்க மாட்டேன்.
சர்வதேச திரைவிழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படத்தை வணிக நோக்கில் திணிப்பது அவசியமற்றது. வன்முறையானது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகராக இருப்பதால், அவருடைய தொடர்புகளை வைத்து ஓடிடியில் நல்ல விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால், இப்படி திரையரங்கங்களுக்கு கொண்டுவந்தது கண்ணியக் குறைவானது” எனத் தெரிவித்துள்ளார்.
அமீரின் கருத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, "திரையரங்கிற்கு இப்படியான படங்களை மட்டும்தான் கொண்டு வரவேண்டும்.. இந்த இந்தப் படங்களோடு இந்த இந்தப் படம்தான் வெளியாகவேண்டும் என்று அண்ணன் அமீர் அவர்கள் வெறும் பொருளாதார, வெகுஜனப் பார்வையைக் கொண்டு வரையறுப்பது படைப்புலகம் மீது செலுத்தும் வன்முறையாகும்.," எனக் கூறியுள்ளார்.