ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டுப் பயணிகள் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களின் விவரம் மற்றும் கால அட்டவணை:
சார்லபள்ளி - நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07535):
ஹைதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியிலிருந்து வருகிற செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குக் கிளம்பும். இச் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 8.40 மணிக்குத் திருநெல்வேலி வந்தடைந்து, இரவு 9.45 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
நாகர்கோவில் - சார்லபள்ளி சிறப்பு ரயில் (வண்டி எண்: 07536):
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து வருகிற செப்டம்பர் 27, அக்டோபர் 4, 11, 18, 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.45 மணிக்குக் கிளம்பும். இச் சிறப்பு ரயில் திருநெல்வேலிக்கு அதிகாலை 2.05 மணிக்கு வந்து, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 3.40 மணிக்குச் சார்லபள்ளியைச் சென்றடையும்.
தென் மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா மற்றும் ஹைதராபாத் பகுதிக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் இச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

