ஜெம் வீரமணி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்ததாகக் எழுந்த புகாருக்குக் காங்கிரஸ் மாநில நிர்வாகி ரஞ்சன் குமார் மறுப்புத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் அளிக்கையில, "கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரமணி மற்றும் சாந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளேன்.
சிறுமிகள் பாதிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் இணைத்திருந்தேன். ஆனால், காவல் துறை எனது புகாரைக் கிடப்பில் போட்டுவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், குழந்தைகளைப் பாதுகாக்கவும் தான் நான் புகாரளித்தேன்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாகத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் நெல்லையில் செயதியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவதாவது: "இவ்வழக்கில் கூறப்படும் சாந்தி என்பவரை எனக்கு யார் என்றே தெரியாது. காங்கிரஸ் கட்சியின் எஸ்சி/எஸ்டி பிரிவு மாநிலத் தலைவராக இருக்கும் ரஞ்சன் குமார் மட்டுமே எனக்கு அறிமுகமானவர்.
ரஞ்சன் குமாரும் சாந்தியும் சேர்ந்து தொழிலதிபர் வீரமணியை மிரட்டி, அவரிடமிருந்து பெரிய தொகையைப் பணம் பறித்துக் கொடுக்குமாறு என்னைத் தேடி வந்து அணுகினர். இதற்காகவே சாந்தி திட்டமிட்டு வீடியோக்களை எடுத்து மிரட்டல் ஆயுதமாகப் பயன்படுத்தினார்.
இப்படியொரு அசிங்கமான மற்றும் சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட என் மனம் சம்மதிக்கவில்லை. இதனால் அவர்களின் கோரிக்கையை உடனடியாக மறுத்துவிட்டு வெளியேறிவிட்டேன். இதில் நான் கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்றதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது" எனக் குற்றம் சாட்டினார்.
ஜெம் வீரமணி விவகாரத்தில் ரஞ்சன் குமார் கூறிய தகவல்களுக்கும், ஜான் பாண்டியன் அளித்துள்ள பேட்டிக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் எழுந்துள்ளதால், காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாருக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், வீரமணி ரூ.70 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்றிருப்பதும், அப் பணத்தைப் பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கு போட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இச்சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவதால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

