தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் மகன் அந்தோணி ராஜ் (34), எலக்ட்ரீசியனான இவர், தனது நண்பர் காளீஸ்வரனுடன் சேர்ந்து பாண்டவர்மங்கலம் கண்மாய்க்கரை அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் சிவா (22) மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த விஜயன் மகன் சதீஷ் (24) ஆகிய இருவரும் அதே பகுதியில் தனியாக மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது சிவா மற்றும் சதீஷ் ஆகிய இருவரும், அந்தோணி ராஜ் மற்றும் காளீஸ்வரனிடம் சென்று அவர்கள் வைத்திருந்த மதுவைத் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்தோணி ராஜ் மது தர மறுத்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சிவா மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த மது பாட்டிலால் அந்தோணி ராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தோணி ராஜ் மற்றும் காளீஸ்வரன் வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காயமடைந்த அந்தோணி ராஜ் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவா மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

