திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு வருகை தந்த கோட்ட மேலாளருக்குக் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமையில் நிர்வாகிகள் டி.எம். அப்துல் சமது, சீதாராமன், முகமது ஷரீஃப், வீரப்பபுரம் கார்த்திக், தானிஷ், மோகன், ஷேக் ஆஸாத் மற்றும் சமூக ஆர்வலர் கூடலரசன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஆய்வின் போது, பயணிகள் நலச்சங்கம் சார்பில் மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அக் கோரிக்கை மனுவில் "கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை விரைந்து முடித்துத் தர வேண்டும்.
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தைச் சீரமைத்துத் தரம் உயர்த்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து கல்லிடைக்குறிச்சி வழியாகச் சென்னைக்கு புதிய தினசரி ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மும்பையிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலைக் கல்லிடைக்குறிச்சி வழியாகச் செங்கோட்டை வரை நீட்டித்து இயக்க வேண்டும் என் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.

