தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி, கமலா நேரு காலனியைச் சேர்ந்தவர் கோபால் மகன் சஞ்சய் குமார் (22). இவர் மீது கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி கஞ்சா வழக்கில் திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றம் இவருக்குப் பிடி ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி மற்றொரு வழக்கிலும் நீதிமன்றம் இவருக்குப் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஆறுமுகனேரி காவல் நிலையப் போலீசார் சஞ்சய் குமாரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தலைமறைவாகப் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இத் தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் தனிப்படை காவலர் சண்முகம் ஆகியோர் உடனடியாக பொள்ளாச்சி விரைந்து சென்று, அங்கிருந்த சஞ்சய் குமாரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் குமாரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்த போலீசார், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் பேரூரணி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.