தூத்துக்குடி மாவட்டம் வடகால் பாசனத்தின் கடைமடை பகுதியான பேய்குளம் கண்மாயை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். வாழை உள்ளிட்ட பயிர்கள் கருகி வருவதால், விவசாயிகள் தட்டப்பாறை விலக்கு பகுதியில் கருகிய வாழைத்தார்களை கையில் ஏந்தி, சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா அரசுக்கு மனு அளித்திருந்தார். இதற்கு கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் 17.09.2026 அன்று அளித்த அதிகாரப்பூர்வ பதிலில், பேய்குளம் கண்மாயை தூர்வார ரூ.23 கோடிக்கு விரிவான மதிப்பீடு (DPR) தயார் செய்யப்பட்டு, தலைமைப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு), சென்னை அலுவலகத்திற்கு நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோடை வெப்பத்தால் ஆகாயத்தாமரை காய்ந்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையில் நீர்வரத்தின்போது மீண்டும் தென்பட்டால் அரசு பராமரிப்பு நிதியில் அகற்றப்படும் என்றும், கண்மாயில் உள்ள சீமைக்கருவேலம் மற்றும் உடை மரங்கள் நடப்பு நிதியாண்டில் அகற்றப்படும் என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நிலத்தடி நீரை உயர்த்த 13 இடங்களில் ரீசார்ஜ் ஷாப்ட் அமைக்க கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நீர்வளத்துறை தடையில்லா சான்று வழங்க தயாராக உள்ளதாக கூறியும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். CSR நிதியை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர் இதை செயல்படுத்த வேண்டும் என்பது கோரிக்கை.

படித்துறையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால், இளைஞர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் சொந்த செலவில் சீரமைத்து வரும் அவலமும் நிலவுகிறது. ரூ.23 கோடி திட்டம் களத்திற்கு வருமா? கருகும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து ஏஞ்சலின் ஜெனிட்டா கூறுகையில், "பேய்குளம் தூர்வாரும் ரூ.23 கோடி திட்டம் கோப்பில் இருந்து களத்திற்கு வர வேண்டும். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் குடிநீர் தேவையையும் காக்க வேண்டும்" என்றார்.