திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.09.2026) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன்தலைமையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நிலவும் மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம், படிப்பில் கவனக்குறைவு, குறைந்த கல்வித் திறன், தேர்வுபயம், இடைநிற்றல் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறுவதியிலேயே குற்றச்செயல்களில் ஈடுபடுதல், போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பழக்கம் போன்ற தவறான பழக்கத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகிறது.

குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல், உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல், நண்பர்களால் துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் குழந்தைகளிடையே அவ்வப்போது காணப்படுகின்றன. மேலும், மொபைல் போன் மற்றும் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாவதுடன், தங்களது பெற்றோர்களுடன் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கவன குறைவு போன்ற கல்வியிலிருந்து மாணவர்களை விலகி செல்வதற்கான வாய்ப்பு உருவாகிறது.

இதனை சரி செய்வதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்கள் நட்புடன் பழகி ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகளை எளிதில் அறிந்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்காகவும், அவர்களுக்கு நல்வழிக்காட்டுவதற்காகவும், அப்பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆற்றுப்படுத்துதல் மையம் (District Counselling Centre) அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு உளவியல் பிரச்சனைகள், போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீட்டெடுத்தல், மாணவர்களிடம் நற்பண்புகளை அதிகரித்தல் தொடர்பாக முதற்கட்டமாக 50 பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டது. இப்பயிற்சிகளை ஆசிரியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளிலுள்ள மாணவர்களை மதிப்பீடு செய்து ஆலோசனைகள் வழங்க வேண்டிய மாணவர்களை கண்டறிந்து, மாவட்ட ஆற்றுப்படுத்துதல் மையத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.சகிலா பானு அவர்கள், குழந்தைகள் மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.