நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (40). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகாராஜன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமராவதி (35) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அமராவதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அமராவதியின் பெற்றோர் மகாராஜனிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அமராவதியின் தங்கை விஜயலட்சுமி இது குறித்துச் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மகாராஜனிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனது மனைவி அமராவதியை கங்கைகொண்டான் துறையூர் அருகே வடக்கு பார்ப்பான்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி குழியில் தள்ளி மகாராஜன் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கல்குவாரி குழியில் கிடந்த அமராவதியின் எலும்புக்கூட்டை மீட்டுத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.