திருநெல்வேலி அருகே ஓட்டலை அடித்து உடைத்துச் சூறையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரைப் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
நெல்லை வீரவநல்லூர் பஜாரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பணம் தராமல் தகராறு செய்ததுடன், நள்ளிரவில் ஓட்டலை அடித்து உடைத்துச் சூறையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி மகாராஜன் (40) மற்றும் அவரது கூட்டாளிகளான சங்கர் கணேஷ், ராகுல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்தவர் மகாராஜன் (40). இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வீரவநல்லூர் போலீசார் இவரை ரவுடிகள் பட்டியலில் வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி இரவு மகாராஜன் தனது கூட்டாளிகளான மற்றொரு ரவுடி சங்கர் கணேஷ், ராகுல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோருடன் வீரவநல்லூர் பஜாரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்குச் சென்று சாப்பிட்டுள்ளார். பின்னர், சாப்பிட்டதற்கான பணத்தைக் கொடுக்காமல் அவர்கள் வெளியேற முயன்றதை ஓட்டல் உரிமையாளர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் நள்ளிரவில் அந்த ஓட்டலை அடித்து உடைத்துச் சூறையாடினர்.
இது குறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலரைக் கைது செய்திருந்தனர்; ஆனால், முக்கியக் குற்றவாளியான மகாராஜன் கைதாகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 20) கொட்டாரக்குறிச்சிக்கு வந்த மகாராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளான சங்கர் கணேஷ், ராகுல் ஆகியோரைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

