நெல்லை சலுக்புரி அடுத்த சித்திரம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. 18 வயது பூர்த்தியடையாத சிறுமி குழந்தை பெற்றதை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், உடனடியாக இது குறித்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், இச்சம்பவம் தொடர்பான புகாரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தனர். அதன் பேரில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர்தான் இதற்குக் காரணம் எனத் தெரியவந்தது. ஆனால், அச்சிறுமியின் கர்ப்பத்திற்கு அந்த நபர் காரணம் இல்லை என்றும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அந்தோணி ராஜ் (40) என்பவர்தான் காரணம் என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
அச்சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது அம்பலமானது. இதன் அடிப்படையில், தச்சநல்லூர் காவல்துறையினர் அந்தோணி ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அச் சிறுமிக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

