‘இளைய புரட்சித் தலைவி’ என்ற பட்டத்துடன் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு நடிகை திரிஷா பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’யைத் நேற்று (நவம்பர் 23) தொடங்கி, அதன் இலச்சினையை வெளியிட்டார்.

தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் நேற்று நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரபல நடிகை திரிஷா பெயரில் ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’யைத் தொடங்கினார். தொடர்ந்து, அந்தப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான ராஜகோபால், திரிஷா பேரவையின் இலச்சினையை (Logo) வெளியிட்டார். அதில் திரிஷா இரு கைக்கூப்பி வணக்கம் தெரிவித்து நிற்கும் புகைப்படமும், 10 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் "பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!!" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

பின்னர் ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "நான் நடிகை திரிஷாவின் தீவிர ரசிகர் என்பதால், சினிமாவைக் கடந்து அவர் பொதுவாழ்விலும், அரசியலிலும் ஈடுபட வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதா போன்ற ஒரு ஆளுமை தேவைப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. இருந்தாலும், விஜய்யுடன் இணைந்து திரிஷாவும் அரசியலில் பயணித்தால் ஜெயலலிதா ஆட்சியைப் போன்ற ஒரு ஆட்சி நமக்குக் கிடைக்கும். ஜெயலலிதாவைப் போன்ற ஒரு ஆளுமை திரிஷாவுக்கு உள்ளது. ஜெயலலிதாவின் வழித்தோன்றலாகத் திரிஷாவை நாங்கள் பார்ப்பதால், அவருக்கு ‘இளைய புரட்சித் தலைவி’ பட்டத்தைச் சூட்டியுள்ளோம்.

அவரது அரசியல் பயணம் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாகத் திரிஷா பேரவையைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தற்போது மக்கள் நலப் பணிகளைச் செய்ய உள்ளோம். பேரவை அமைத்தது குறித்து அவரிடம் நாங்கள் எதுவும் பேசவில்லை; விரைவில் அவரைச் சந்திப்போம்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது அசோக், சாய்பிரகாஷ், அர்ச்சுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பேரவைத் தொடங்கியுள்ள ராஜகோபால் இதற்கு முன்பு ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.