திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூர் - நெல்லை மற்றும் நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள் இன்று (நவம்பர் 26) முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருச்செந்தூரிலிருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56004) இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, திருநெல்வேலியிலிருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும் நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலும் (வண்டி எண்: 56003) இன்று முதல் 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை ரயில்கள் சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கம்:

இதேபோல், செங்கோட்டையிலிருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56742), இன்று முதல் 30-ஆம் தேதி வரை சேரன்மாதேவி - நெல்லை சந்திப்பு இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, நெல்லையிலிருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56743) இன்று முதல் 30-ஆம் தேதி வரை நெல்லை - சேரன்மாதேவி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நெல்லை சந்திப்புக்குப் பதிலாகச் சேரன்மாதேவியில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.