கன்னியாகுமரி அருகே போலீசார் தொடர்ந்து அச்சுறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே பால்குளம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுதாகர், அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பிரிய ராஜகுமார் ஆகியோர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் கிருஷ்ணம்மாள் (60) புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 194 பி.என்.எஸ்.எஸ். பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள பால்குளம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதாகர் (லாரி ஓட்டுநர்). இவருக்கும் அருகில் வசிப்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கில், போலீசார் தன்னைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும், தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்படுமோ என்ற அச்சத்திலும் சுதாகர் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், அருகிலுள்ள தோட்டத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மரணத்திற்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரே காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சுதாகரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், புகார் அளிக்கவும் மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாங்கள் அளிக்கும் புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கைக்குப் போலீசார் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சுதாகரின் தாயார் கிருஷ்ணம்மாள் (60) புகார் மனு அளித்தார். அதில், "அஞ்சுகிராமம் எஸ்.ஐ. பிரிய ராஜகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் எனது மகனைத் தொடர்ந்து தேடி வந்து, 110 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், உன்னை வாழவிட மாட்டோம் என்றும் கூறி மிரட்டியதாலேயே எனது மகன் தற்கொலை செய்து கொண்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாயார் அளித்த புகாரின் பேரில், கன்னியாகுமரி போலீசார் தற்போது பி.என்.எஸ்.எஸ். (BNSS) பிரிவு 194-ன் கீழ் (தூக்கிட்டுத் தற்கொலை) வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) எஸ்.ஐ. பிரிய ராஜகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) தலைமையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள சுதாகரின் உறவினர்கள், முதல் தகவல் அறிக்கையில் 'தற்கொலைக்குத் தூண்டியதாக' உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் பால்குளம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.