இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் தீவிரமாக இருந்த மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடும் நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், ஜிராம்காட்டி என்ற இடத்தில் 150-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர்.

இந்த வன்முறைத் தாக்குதலில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் பட்டேல் மற்றும் முக்கியத் தலைவர்கள் உட்பட மொத்தம் 27 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மேலும், இத்தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லாவும் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார். இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை சத்தீஸ்கரின் ஜகதால்பூரில் உள்ள என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 17) தீர்ப்பளித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், கைதான 10 மாவோயிஸ்டுகளுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.