நாங்குநேரியில் சொத்துப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில், முதியவரை அவரது பேரனே வீதியில் வைத்துச் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தளவாய் (75). வாழைத் தோட்டங்களில் வாழை இலை அறுக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவரது மனைவி கடந்த ஓராண்டிற்கு முன்பு காலமானார். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளின் மகன் கிருஷ்ண ராஜா (20) டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், தளவாய் நேற்று அதிகாலையில் பால் வாங்குவதற்காக நாங்குநேரி அண்ணா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பேரன் கிருஷ்ண ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தளவாயைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த தளவாய், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் கிருஷ்ண ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்து நாங்குநேரி துணைக்காவல் கண்காணிப்பாளர் சதீஷ் கண்ணா, ஆய்வாளர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தளவாய்க்கு நாங்குநேரி பஜாரில் பாத்திரக்கடையும் வீடும் சொந்தமாக உள்ளது. இவரது இரண்டு இளைய மகள்கள் அந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவர்கள் இருவருக்கும் சொத்துக்களை எழுதி வைக்கத் தளவாய் ஏற்பாடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மூத்த மகளுக்குச் சொத்தில் பங்கு தராமல் விட்டுவிடுவாரோ என்ற ஆத்திரத்தில் இருந்து வந்த கிருஷ்ண ராஜா, அண்ணா சாலையில் வைத்துத் தாத்தா தளவாயைக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தப்பிய ஓடிய கிருஷ்ண ராஜாவை நாங்குநேரி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். சொத்து தகராறில் தாத்தாவைப் பேரனே வெட்டிக்கொன்ற சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

