தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் என மொத்தம் 21 பேர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தின் போது, அன்றைய அதிமுக அரசும் காவல்துறையும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் என மொத்தம் 21 அதிகாரிகள் நேரடியாகக் காரணம் என்றும், அவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், கடந்த அதிமுக அரசும் தற்போதைய திமுக அரசும் இக்கொலைக் குற்றவாளிகளான அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களுக்குப் பதவி உயர்வுகளும் அதிகாரப் பொறுப்புகளும் வழங்கிப் பாதுகாப்பது பாதிக்கப்பட்ட மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் என 21 பேரையும் உடனடியாகக் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அவர்களைப் பணியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த 15 தியாகிகளின் குடும்பங்களுக்கும், படுகாயமடைந்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தியாகிகளுக்கும் ஆணையத்தின் பரிந்துரையின் படி உடனடியாக உயர்மட்ட இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்துக் கட்டமைப்புகளையும் அடியோடு தகர்த்து எறிந்து, அந்த இடத்தில் உயிரிழந்த தியாகிகளின் நினைவாகச் "சூழலியல் தியாகிகள் நினைவு மண்டபம்" அமைக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் பதவி எனும் கவசங்களைத் தகர்த்து பாதிக்கப்பட்ட மக்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரட்டி இரண்டாவது கட்ட மாபெரும் மக்கள் புரட்சிப் போராட்டத்தையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தீவிரமாக முன்னெடுப்போம் எனப் படுகொலையிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.