தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் 'இண்டி' (INDIA) கூட்டணிக் கட்சியினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, 'இண்டி' கூட்டணிக் தலைவர்கள் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் தடையை மீறிப் போராட்டம் தொடர்ந்ததால், அங்கிருந்த காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைப் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இப் போராட்டத்தின் போது காவல்துறையினரைத் தாக்கியது மற்றும் அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது டெல்லி காவல்துறையினர் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, எஸ்.ஐ.ஆர். (SIR) விவகாரம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்திக்க 'இண்டி' கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 தலைவர்கள் அனுமதி கோரியிருந்தனர்.

rahulprotestdelhi.jpg

ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் 10 தலைவர்கள் மட்டும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் குழுவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.