தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பேசுகையில், "வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கிராமப்புறங்களில் உள்ள மதகுகள் உடைப்புகள் சரி செய்யப்படவில்லை. எந்தவிதமான அத்தியாவசிய பணிகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.

தினமும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 10% முதல் 20% சதவீதம் தண்ணீர் மட்டுமே திந்து விடுவதால் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையால் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. மிகக்கடுமையான மின்வெட்டு, இந்த மின்வெட்டின் காரணமாக அதிக உயர் மின்னழுத்தம் காரணமாகவும் மின் குறைவு காரணமாகவும், மின்சாதன பொருட்கள் எல்லாம் பழுதடைந்து உள்ளது.

இந்த அரசு செயல்படக்கூடிய மிகவும் முக்கியத்துறைகளான மின்சாரத்துறை, சாலைப் போக்குவரத்துதுறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்ப்பாசனதுறை, ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வளங்கள் துறை என்ற எந்தத் துறையிலும் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் பட்டபகலில் இரட்டை கொலை நடந்துள்ளது, பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது, தினமும் தமிழகத்தில் அரிவாள் வெட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை. இளம்பெண்கள் இளைஞர்கள் மாணவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.

மாட்டுவண்டி போட்டி போன்ற கிராமம் கூடி அனைவரும் சேர்ந்து நடத்துகிற விளையாட்டுப் போட்டிகளை தடை செய்வது, அனுமதி தராமல் அலைக்கழிப்பது போன்றவை தொடர்கிறது. விளாத்திகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தினமும் விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள், நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு போன் போட்டால் மக்களினுடைய பிரச்சினை பற்றி பேசினால் டிஎஸ்பி, எஸ்பி உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் போன் எடுப்பதில்லை.

எதைக்கேட்டாலுமே அதிகாரிகளிடமிருந்து எதிர்த்து மறுத்து தான் பதில் வருகிறதே தவிர மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. பொதுமக்களின் பிரச்சனைக்கு வந்தால் எப்ஐஆர் போடுகிறார்கள், கிராமத்தில் பொங்கல் நடத்தினால் எப்ஐஆர் போடுகிறார்கள், கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தினால் எப்ஐஆர் போடுகிறார்கள், இந்த அரசு எந்தவிதமான அரசு பணிகளையும் செய்யாமல், கேளிக்கைகளுக்கும், சுற்றுப் பயணங்களுக்கும், உல்லாசங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மேல்மாந்தை கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்திய கிராம பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக இந்த அரசு திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை விளாத்திகுளத்தில் நடத்துவோம் என்று மார்கண்டயேன் எம்எல்ஏ கூறினார்.