தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 21.09.2026 அன்று வரப்பெற்ற புகாரில், தங்க நகை பரிவர்த்தனை தொடர்பான தகராறில் புகார்தாரரிடம் ரூ. 1 கோடி பணம் தருமாறு கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பணம் தராவிட்டால் புகார்தாரருக்கும் அவரது தொழிலுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களைப் பரப்பி மானபங்கம் செய்வதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இப் புகாரின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 308(4) மற்றும் 351(3)-ன் கீழ் குற்ற எண்: 917/2026 என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், தூத்துக்குடி 3-வது மைல், தேவர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் இசக்கிராஜா (46) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இவர் PMT (People Movement Team) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட இசக்கிராஜா தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இப் வழக்கு தொடர்பாகத் தெற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

