தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் இசக்கி ராஜா (46). இவர் பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். இன்று காலை தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார், இசக்கி ராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இக்கைது நடவடிக்கை குறித்துப் போலீசார் தரப்பில் நடத்திய விசாரணையில் வெளிவந்த விவரங்கள்: தூத்துக்குடியில் உள்ள பிரபல வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட தங்க நகையில் உலோகம் அதிகமாகக் கலந்திருப்பதாகக் கூறி, அதை வாங்கிய நபர் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நகை வாங்கிய நபருக்கு ஆதரவாக இசக்கி ராஜா வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் பேசியுள்ளார். அப்போது, நகைக்காக ரூ.4,22,000 பெற்றுக் கொண்டதுடன், மேலும் ரூ. 1 கோடி கேட்டு அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட வணிகர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தென்பாகம் போலீசார், இன்று காலை இசக்கி ராஜாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையம் முற்றுகை - பரபரப்பு!
இசக்கி ராஜா கைது செய்யப்பட்ட தகவலறிந்து, பசும்பொன் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்கக் காவல் நிலையத்தின் முதன்மை நுழைவு வாயில் பூட்டப்பட்டு, வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

