தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு இந்த கட்டண வசூல் நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும், இதற்கான தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.
யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் நடைமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்குப் பிறகு இது அமலுக்கு வரும் என்றும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது.
இது குறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள தகவலில், "யுபிஐ உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு யுபிஐ வணிக கட்டண நடைமுறையை தள்ளிவைக்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வணிக யுபிஐ கட்டண வசூல் நடைமுறை அமலுக்கு வரும். இது தொடர்பான தேதி பின்னர் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசரா, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் கட்டண வசூல் நடைமுறையை தள்ளிவைக்குமாறு வர்த்தக, தொழில் சேம்பர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிகர் சங்கங்களும் கோரிக்கை விடுத்திருந்தன. இதனை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், பண்டிகை கால விற்பனை மேலும் அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நாடு முழுவதும் அக்டோபர் 15-ம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யும் சிறு வணிகர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் என்பிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துவந்த சூழலில் தற்போது இந்தத் தள்ளிவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

