தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள அடவிநயினார்கோவில் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா கலந்துகொண்டு தண்ணீரைத் திறந்து வைத்தார்.

அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம் கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரை கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் மூலமாக நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 7,643.15 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் திறப்பு விவரம்: அடவிநயினார்கோவில் அணையில் இருந்து இன்று முதல் வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை மொத்தம் 135 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கனஅடி வீதம், மொத்தம் 955.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் எனத் துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, செயற்பொறியாளர் மணிகண்ட ராஜா, உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.