தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், துறை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த காலத்தில், திலீபன் அங்கு பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, திலீபன் மீதான துறைரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அவர் கடந்த 585 நாட்களாக எந்தவித முன்கூட்டிய அறிவிப்பும் இன்றித் தொடர்ந்து விடுப்பில் இருந்து வந்ததுடன், உயர் அதிகாரிகளின் விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து, காவல்துறை விதிமுறைகளை மீறியதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாகப் பணியிலிருந்து விலகியிருந்ததாகவும் கூறி, ஆய்வாளர் திலீபனைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பெண் காவலர் அளித்த புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் மற்றும் தற்போதைய நிரந்தரப் பணிநீக்க நடவடிக்கை என அடுத்தடுத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

