கோவில்பட்டி கோட்ட அஞ்சலகங்களில் மென்பொருள் தரமேம்பாடு நடைபெற இருப்பதால், அஞ்சல் ஆயுள் காப்பீட்டுச் சேவை வரும் 16-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 9 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகக் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "அஞ்சலகங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) ஆகிய சேவைகளுக்குத் தற்போது பயன்படுத்தப்படும் மென்பொருளில் தரமேம்பாடு மற்றும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதன் காரணமாக, வரும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அஞ்சலகங்கள் மற்றும் இணையதளத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடர்பான சேவைகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பணிகள் நிறைவடைந்து, வரும் 25-ஆம் தேதி முதல் வழக்கம் போல் இந்தச் சேவைகள் மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருளில் தொடரும்."

எனவே, பொதுமக்கள் புதிய ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகள் தொடங்குதல், ஏற்கெனவே தொடங்கிய பாலிசிகளுக்குப் பிரீமியம் செலுத்துதல், கடன் தொகை மற்றும் முதிர்வுத் தொகை பெறுதல் போன்றவற்றிற்கு இத்தற்காலிக நிறுத்தத்தைப் பொறுத்துக்கொண்டு, மென்பொருள் மேம்பாட்டுப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், இந்த நாட்களில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுச் சேவைகளைத் தவிர, மற்ற அஞ்சலகச் சேவைகளான சேமிப்புக் கணக்கு தொடங்குதல், பணப் பரிவர்த்தனை, கடிதம் மற்றும் பார்சல் புக்கிங் மற்றும் டெலிவரி ஆகியவை எவ்விதத் தடையுமின்றி வழக்கம் போல் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.