திருச்செந்தூர் நகராட்சியில் தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றியது போன்ற அனைத்து நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர் நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி காயல்பட்டினம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகளில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு அனைத்து வணிக நிறுவனங்களிலும் குடிநீர் குழாயில் விதிமுறைக்கு மீறி மின் மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சுபவர்கள், பாதாள சாக்கடை தொட்டிக்குள் விடுவதற்கு முன்பு வடிகட்டி பில்டர் எனப்படும் ஸ்கிரீன் வைக்காமல் நேரடியாக விடுபவர்கள், பாதாள சாக்கடை குழாய் உள் மின் மோட்டார் பயன்படுத்தி உந்தி தள்ளுபவர்கள், வரி இல்லாமல் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஆகியவற்றினை சிறப்பு குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் மின்மோட்டார்கள் பயன்படுத்தியவர்களின் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் பாதாள சாக்கடை தொட்டிக்குள் விடும் முன்பு வடிகட்டி வைக்காதவர்களுக்கு பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வடிகட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் வடிகட்டி வைக்காதவர்களின் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடை வரி இல்லாமல் குழாய் இணைப்பு உள்ளவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

திருச்செந்தூர் நகராட்சியில் அனுமதியின்றி விடுதிகளாக செயல்படும் வீடுகளில் நகராட்சி ஆணையாளர் ஏழுவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செந்தூர் நகராட்சியின் குடிநீரை சரிவர மக்களுக்கு செலுத்தும் பொருட்டு வணிக நிறுவனங்களில் விதிமுறைக்கு மீறி நீர் எடுப்பவர்கள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இனி வரும் காலங்களில் வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் மின்மோட்டாரினை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றுவதற்கு நகராட்சியில் உரிய அனுமதி பெற்று செயல்பட வேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறாமல் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.