திருநெல்வேலி மாநகர புதிய பேருந்து நிலையம் அருகில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளியை உடனடியாகக் கைது செய்த காவலர்களை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

திருநெல்வேலி மாநகர புதிய பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி பால பிரசாத் (30) என்பவர், அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சூழ்நிலையை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டுப் பாலபிரசாத்தை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைக் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றி, குற்றவாளியைத் துரிதமாகப் பிடிக்கச் செயல்பட்ட திருநெல்வேலி மாநகர தலைமை காவலர் ராதிகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த முதல் நிலை காவலர் பாலமுருகன், காவலர்கள் அஜய், முரளி, முத்து, பழனிராஜ், மாதவன் ஆகியோரின் சிறப்பான பணியைப் பாராட்டும் விதமாக, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்வின்போது, காவல் துணை ஆணையர் (கிழக்கு) சரவணன், மற்றும் உயர் காவல் அதிகாரிகள் உடனிருந்து காவலர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடப்பவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.