தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெருவைச் சேர்ந்தவர் தங்கச்செல்வி (49), தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி சாத்தான்குளம் பஜாருக்குச் சென்றிருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவரிடம் பேசியுள்ளார். தன்னிடம் 7 பவுன் எடையுள்ள 15 தங்க நகை டாலர்கள் உள்ளதாகவும், அவற்றை வாங்கிக் கொள்ளுமாறும் அப்பெண் கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனத் தங்கச்செல்வி தெரிவித்துள்ளார்.

அப்போது அப்பெண், நகை டாலரை நகைக் கடையில் சோதித்துப் பார்த்து வாங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அருகிலிருந்த நகைக் கடைக்குச் சென்று சோதித்தபோது அது தங்க நகை எனத் தெரியவந்ததால், தான் அணிந்திருந்த ஆறேகால் பவுன் நகை மற்றும் இரண்டரை கிராம் காது மாட்டியைக் கொடுத்து 15 தங்க நகை டாலர்களைத் தங்கச்செல்வி வாங்கியுள்ளார். ஒரு வாரத்திற்குப் பிறகு நகைத் தொழிலாளியிடம் அந்த டாலர்களைக் கொண்டு சென்றபோது, அவை போலியானவை எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தங்கச்செல்வி அளித்த புகார் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் செல்வராஜ் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி சட்டப் பிரிவு 381(4)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.