மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை சாத்தூரைக் கடந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சோரா உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான காவல் துறையினர் ரயிலில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, இன்ஜினை ஒட்டி அமைந்திருந்த பொதுப் பெட்டியில் உரிமை கோரப்படாமல் இருந்த பை ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் சுமார் 9½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், மற்றொரு வெள்ளை நிறச் சாக்குப்பையில் 9 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சமீபகாலமாக வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.