தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (16.09.2026) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்கை பேரிடர் நிதியின் கீழ் ரூ.16.80 இலட்சம் மதிப்பீட்டில் அதி நவீன கணினி ஆய்வகத்திற்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும்,
அதே ஊராட்சியில் 15 ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தின் கட்டடப் பணிகள் குறித்தும், சில்லாங்குளத்தில் உள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், கீழமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் குறித்தும், மாலப்பட்டி கிராமத்தில் மாலப்பட்டி உப்பாற்று ஒடைக்கான திட்டப் பணிகள் குறித்தும்,
ஓட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பணிகள், அடிப்படை வசதிகள் குறித்தும், மருத்துவமனை வளாகத்தில் 15 ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.78.20 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார பொதுசுகாதார ஆய்வகத்திற்கான கட்டடம் கட்டப்பட்டுள்ள பணிகளையும், அதே மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும்,
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒட்டநத்தம் கண்மாய் மறுகால் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவது மற்றும் முரம்பன் குளத்திற்கான நீர்வழி பாதை குறித்தும், குலசேகரநல்லூர் நியாய விலைக்கடையில் பொருட்களின் தரம், இருப்பு பதிவேடு குறித்தும், குலசேகரநல்லூர் ஊராட்சி,
ஒசநூத்து கிராமத்தில் ஊரக நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குழந்தைகளின் எடை, உயரம் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், ஓட்டப்பிடாரம் ராஜாவின் குளத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், 6 பயனாளிகளுக்கு பட்டாக்களுக்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ள திட்ட பணிகளில் பின்னூட்டங்களை கள ஆய்வு மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஓட்டப்பிடாரத்தில் ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், தெற்கு பரம்பூரில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.40.75 இலட்சம் மதிப்பீட்டில் 100000 லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வரும் பணிகளையும், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பணிகள், அடிப்படை வசதிகள் குறித்தும், அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவ கட்டடத்திற்கான கட்டடப்பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, தனித் துணை ஆட்சியர் (பொ) (ச.பா.தி) விஜயா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பென்னட் ஆசீர், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஐய்யனார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

