தென்காசி மாவட்டம் மேலகரம் அருகே உள்ள மின்நகரில் வசித்து வரும் 80 வயதான விஜயலட்சுமி அம்மா, ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமது செயல்களாலும், கண்டுபிடிப்புகளாலும் மற்றவர்களுக்கு புரிய வைத்தவர்.வெறும் கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்கும் "பேப்பர் பிரசன்டேஷன் பெர்சனாலிட்டி" அல்ல இவர். களத்தில் நிற்பார், மண்புழுவை வருடுவார், திடக்கழிவு மேலாண்மையை தீவிரமாக நம்பி செயல்படுத்துவார்.
குளம், குட்டை, வரப்பு, வயக்காடு, அகண்ட நீரோடைகள், ஆகாயத்தாமரைகள், உழவன் அங்காடி என அவர் கால் தடம் பதியாத இடங்களே இல்லை.இவரிடம் பயின்ற எண்ணற்ற மாணவ, மாணவியர் இன்று உயர்ந்த பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்தாலும், அவர்களுக்கு அம்மா விஜயலட்சுமி பிரம்மாண்டமாய் திகழ்கிறார்.
இந்நிலையில் அவரது சுற்றுச்சூழல் சேவையை பாராட்டி "பசுமை போராளி" விருது அவரது இல்லத்திற்கே சென்று வழங்கப்பட்டது.இந்த விழாவில் முதுபெரும் காந்தியச் செம்மல் செங்கோட்டை விவேகானந்தன், "ஹட்" நிறுவன முனைவர் ரெங்கநாதன், விதைப்பந்து பிரச்சாரகர் வெங்கடாம்பட்டி பூ. திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலிப்பருத்தி விதைகள் போல விஜயலட்சுமி தாய் அவர்களின் பசுமைப் பெருமைகள் நெருப்பு தவிர்த்த நான்கு பூதங்களாலும், நான்கு திணைகளிலும், நான்கு திசைகளுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும், அவரது பெருமைகளை அடுத்த நூற்றாண்டிற்கும் சுமந்து செல்லும் மனிதர்கள் இனிமேலும் பிறக்கப் போகின்றனர் என்றும் விழாவில் பேசியவர்கள் புகழாரம் சூட்டினர்.

