டெல்லியில் 'இந்தியா' கூட்டணி சார்பாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணி காரணமாக நகரில் சுமார் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் 'இந்தியா' கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி காரணமாக வணிகர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து வணிக மற்றும் தொழில் சபையின் தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்ததாவது: "காஷ்மீரி கேட், சாந்தினி சவுக், சதர் பஜார், சாவ்ரி பஜார், கரோல் பாக், கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய வர்த்தகச் சந்தைகளில் மொத்தம் சுமார் 3 லட்சம் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பேரணி காரணமாக இதில் சுமார் 2.5 லட்சம் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இதனால் 80 சதவீத வணிக நடவடிக்கைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டதோடு, மத்திய டெல்லியில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டன. இயங்கிய ஒரு சில கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக ரூ.10,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது." என்றார்.
முன்னதாக, தீபாவளி பண்டிகைக் காலத்தில் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்பதால், பேரணியைத் தீபாவளிக்குப் பிறகு நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களுக்குப் பல்வேறு வணிகர் சங்கங்கள் சார்பில் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன.
இருப்பினும், பேரணி திட்டமிட்டபடி நடைபெற்றதால் வணிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை யார் ஈடு செய்வது என்றும் வணிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

