தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23), நெல்லை மாவட்டம் அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (21) ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சுஷ்மிதாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின், பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஆகாஷ் தோட்டத்தில் நெல்லிக்காய் பறிக்கும் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் வேலை முடிந்து ஆகாஷ் இரவு வீட்டில் மனைவி சுஷ்மிதாவுடன் இருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சுஷ்மிதாவின் தந்தை முருகன், வீட்டிற்குள் புகுந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆகாஷின் தலை, கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற மகள் சுஷ்மிதாவின் கையிலும் வெட்டு விழுந்தது.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், முருகன் தான் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றார். இரத்த வெள்ளத்தில் துடித்த தம்பதியைப் பாவூர்சத்திரம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஆகாஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுஷ்மிதா லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பாவூர்சத்திரம் காவல்துறையினர், தப்பி ஓடிய பெண்ணின் தந்தை முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

