தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்த எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் புதன்கிழமை பிற்பகலில் 11 மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
மீன்பிடித்து முடித்துவிட்டு மாலையில் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, மணப்பாடு தூண்டில் வளைவுப் பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிப் படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படகில் இருந்த 11 பேரும் கடலில் மூழ்கினர். அதில் 10 மீனவர்கள் நீந்திப் பத்திரமாகக் கரைக்கு வந்து சேர்ந்த நிலையில், சுனாமி காலனியைச் சேர்ந்த சிலுவைப்பிச்சை என்பவரின் மகன் வால்டர் (23) மட்டும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
இதையடுத்து, மாயமான மீனவரை மீட்க 25-க்கும் மேற்பட்ட படகுகளில் சக மீனவர்கள் கடலுக்குச் சென்று தீவிரமாகத் தேடினர். மேலும், இந்தியக் கடலோரக் காவல் படையினரின் ரோந்துப் படகு மற்றும் 'டோனியர்' ரக விமானம் மூலமும் வான்வழியாகத் தேடும் பணி முடுக்கப்பட்டது.
இந்நிலையில், தீவிரத் தேடுதலுக்குப் பிறகு மணப்பாடு தூண்டில் பாலத்தையொட்டியுள்ள ஆழமான பகுதியில் மீனவர் வால்டரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மீனவக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

