தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, கேமரா வசதியுடைய செல்போன்களுக்கு மட்டுமே கோவில்களுக்குள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. கேமரா வசதியில்லாத செல்போன்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றார்.

இதன்படி, கேமரா இல்லாத செல்போன்களை பொதுமக்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை அமலுக்கு வந்த சூழலில், அமைச்சரின் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட 52 கோவில்களில் செல்போன்களுக்கு தடை நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.