பெரியபாளையம் அருகே ஓடும் கல்லூரிப் பேருந்தை வழிமறித்து, உள்ளே இருந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற சக மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரியபாளையம் அடுத்த தண்டலத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினந்தோறும் கல்லூரிப் பேருந்தில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் கல்லூரிப் பேருந்தில் மாணவி சென்று கொண்டிருந்தார். பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் பகுதியில் ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, திடீரென வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைச் சாலையின் குறுக்கே நிறுத்தி கல்லூரிப் பேருந்தை வழிமறித்தார்.
பின்னர் பேருந்தில் ஏறிய அந்த வாலிபர், அங்கிருந்த மாணவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, பேருந்திலிருந்து கீழே இறங்கிய அவர், தனது மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து மாணவி மீது ஊற்றித் தீவைக்க முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்திலிருந்த மற்ற மாணவிகள் அலறி கூச்சலிட்டனர்.
உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் சக மாணவ, மாணவிகள் இணைந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். இதனால் மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அதே கல்லூரியில் 3-ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு பொறியியல் படித்து வரும் பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்கிற சாமுவேல் (21) என்பது தெரியவந்தது.
மேலும், அந்த மாணவியைத் தான் ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், ஆனால் மாணவி தன்னைக் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

