தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு சத்திரத்தைச் சேர்ந்தவர் காளிபாண்டி (31). பெயிண்டரான இவருக்கு, விருதுநகர் மாவட்டம் தேவதானத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (29) என்பவருடன் திருமணமாகி கபினேஸ்வரன் (6), ரபினேஸ்வரன் (4) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
காளிபாண்டிக்கு மதுப்பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சிவகிரியில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. விழா நிகழ்வான கும்மியடிக்கும் நிகழ்ச்சியில் மாரியம்மாள் கலந்துகொண்டிருந்தார். அங்கு வந்த காளிபாண்டி, இரவு நேரமாகிவிட்டதால் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு மாரியம்மாள் சற்று நேரத்தில் நிகழ்ச்சி முடிந்துவிடும் எனக் கூறியதால், ஆத்திரமடைந்த காளிபாண்டி பொதுமக்கள் முன்னிலையில் மாரியம்மாளின் கன்னத்தில் அறைந்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் கணவர் அடித்ததால் கடும் அவமானமும் வேதனையும் அடைந்த மாரியம்மாள், தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்.
ஆத்திரத்தில் இருந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயைத் தனது மகன்கள் கபினேஸ்வரன், ரபினேஸ்வரன் மீது ஊற்றி தீவைத்தார். தொடர்ந்து தன் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த சிவகிரி போலீஸார் பார்த்தபோது, உடல் கருகி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 2 குழந்தைகளையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இரு குழந்தைகளும் இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துச் சிவகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

