நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4-வது அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து, தமிழகத்திற்கு 75.63 சதவீத மின்சாரத்தை ஒதுக்கீடு செய்ய மத்திய மின்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 3-வது அணு உலையில் 2027 டிசம்பரிலும், 4-வது அணு உலையில் 2028 டிசம்பரிலும் மின் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரு புதிய அணு உலைகளிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாகத் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
பொதுவாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் மின் நிலையம் அமைக்கும் போது, அங்கு உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 50 சதவீதம் மட்டுமே அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்படும். இருப்பினும், கூடங்குளம் விரிவாக்க திட்டத்திலிருந்து தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 75.63 சதவீத மின்சாரம், அதாவது 1,507.51 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.
மற்ற மாநிலங்களுக்கான ஒதுக்கீடு விவரம்:
கர்நாடகா: 256 மெகாவாட்
ஆந்திரப் பிரதேசம்: 226 மெகாவாட்
புதுச்சேரி: 9 மெகாவாட்
இந்த கூடுதல் மின்சார ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

