கல்வியாளர்கள் மற்றும் நலவிரும்பிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர். ராஜவேலு கலந்துகொண்டு கல்விக்கொடியை வெளியிட்டார்.
மகாகவி பாரதியாரின் “வையத் தலைமை கொள்” என்ற உயரிய தொலைநோக்குச் சிந்தனையை இன்றைய தலைமுறை மாணவர்களிடம் கல்வி வழியாக எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இக்கல்விக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
இது வெறும் அடையாளக் கொடியாக மட்டுமல்லாமல், மாணவர்களிடையே காட்சிக் கற்றல் தூண்டுதலாகச் செயல்பட்டு, அவர்களைத் தினமும் அவதானிக்கவும், கேள்வி கேட்கவும், ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஊக்கப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாடம் மனப்பாடம் செய்வதைத் தாண்டி மனித ஆற்றல், சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதே உண்மையான கல்வி என்ற அடிப்படையில், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டை வலியுறுத்தும் சின்னமாக இக்கல்விக்கொடி அமையும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.

